Sunday, 31 May 2015

பச்சை விடியல்..


 தோழர்களே ,

இன்று மெதுவாக,  இளம் தலைமுறையினரிடம் விவசாயம் கவனம் பெறுகிறது . நாட்டின் முதுகெலும்பை  திரும்பிப் பார்க்க விழைகிறார்கள் எனும் செய்தியே இனிமை தான்.

ஆனால் இவர்களின் பார்வையில் விவசாயம் எப்படி தெரிகிறது என்பதை கொண்டே இந்த மாற்றம் நல்லதா , தீயதா என முடிவெடுக்க முடியும்.

நகர வாழ்க்கை பிடிக்காதவன், பேசாம கிராமத்துல போய் விவசாயம் பண்ணிரலாம் என்று சொல்வதும்,

படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காதவன் , பேசாம மாடு மேய்க்க போயிறலாம் என்று சொல்வதும்,

ஆரோக்யமான வாழ்கை வேணும்னா  கிராமத்துல செட்டில் ஆகுறது தான் ஒரே வழி என்று அவன் கடைசி கால காசியாய்  கிராமங்களை பார்ப்பவனும், உண்மையிலேயே விவசாய வாழ்வியலுக்கு ஒரு நச்சான செயற்கை உரம் தான்.

விவசாயத்தை  ஒரு தொழிலாக மட்டுமே  பார்த்தோமேயானால் ஒரு மிகப்  பெரும்  கொடுஞ்ச்செயலுக்கு அடித்தளமிடவே நாம் ஆயத்தம்  ஆகிறோம்.

இயற்கை விவசாய முறையில் விழைய வைக்கும் பொருளுக்கு விலை அதிகமாம் என்று இயற்கை விவசாயம் செய்ய துடிக்கும் பட்டாளம் இன்று பெருமளவு பரவுவது பெரும் ஆபத்தில் தான் கொண்டு சேர்க்கும்.

உங்கள் பணத்தை முடக்கி லாபம் தேடும் long-term investment எங்கள் விவசாயம் அல்ல.

உங்கள் corporate மூளைகளை சோதிக்கும் testing  environment  எங்கள் விவசாய நிலங்கள்  அல்ல.

பணம் மட்டுமே குறியாய் கொண்டு  தொழிலாளியை ஒரு எந்திரம் போல் நடத்தும் முறையை இங்கு அமல் படுத்த முனையாதீர்கள்.


மண் வளம் , மழை ஆதாரங்கள் , நிலப் பயிர்கள், விலங்குகள், பூச்சிகள் , மலைகள், காடுகள், குளங்கள் , ஆறுகள்  இவை எல்லாம் சார்ந்தது தான் விவசாயம்.
 நம் முன்னோர்களால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்  கணிக்கப்பட்டு, செப்பனிடப்பட்டு , உழைப்பால் நிர்ணயிக்கப்பட்டவைகளே இன்று நாம் பார்க்கும் விவசாய முறைகள். இதன் பெருமை தெரியாமல் மேல் நாட்டு  மோகத்தால் வழி மாறி சென்று விவசாய நிலங்கள் கணினி கற்று  கொடுக்கும் கல்லூரிகளாக மாறிய பிறகும் இன்றும் விவசாயத்தை விடாமல் பற்றி இருக்கும் விவசாயிகளே நாம் வணங்க வேண்டிய தெய்வங்கள். ஏனென்றால் அவர்கள் நமக்காய் உருவாக்கி இருப்பது ஒரு ஏக்கர் விவசாய நிலம் அல்ல, உலகிலேயே மிக அழகான, தீங்கற்ற, மகிழ்ச்சியான வாழக்கை முறையை.இதை உணர்ந்து , இதற்கு ஆசைப்படுபவன் மட்டுமே கலப்பையில் கை வைக்கட்டும்.

விவசாயம் என்பது ஒரு தொழில் மட்டும் அல்ல.அது ஒரு வாழ்கை முறை .

நம்மை தாங்கும் இம்மண்ணை தன்  தாயாக நினைப்பவனும்,

ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களையும் தன்  வாழ்வின் ஒரு பங்காக பாவிப்பவனும்,

தேவைகள்  குறைவாய் இருப்பவனே பணக்காரன், இதை முழுதாய் உணர்ந்தவனும்,

புதுமை புகுப்பின் அதன் எதிர்கால  நன்மை தீமைகளை ஆராய தெரிந்தவனும்,

மேல் நாட்டு உரங்களையும், முறைகளையும் வன்மையாக எதிர்க்கும் போராளியும்  ஒரு படையாய்  தயாராவோம் நண்பர்களே நம் பச்சை விடியலை நோக்கி..

No comments:

Post a Comment